Tuesday, May 01, 2012

திருமெய்யத்தில் பகவத் ராமானுஜரின் திருநட்சத்திர உத்சவம்


என் தாய் வழி பாட்டனார் புதுக்கோட்டை மற்றும் காரைக்குடிக்கு நடுவில் அமைந்திருக்கும் திருமெய்யம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அந்த வைணவ திவ்யதேசம் பற்றி எனக்கு நிறைய சொல்லியிருக்கிறார். அவர் காலமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் தான், அக்கோயிலுக்கு சென்று பெருமாளை முதல் முறை தரிசித்தேன். அதன் பின்னர், ஒரு 3-4 முறை சென்றிருப்பேன்.

மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 8-ஆம் நூற்றாண்டு கோயிலிது. மலைக்கு மேல் கோட்டை உள்ளது. சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் கோயிலை சுற்றி மதில் சுவரை காணலாம்.

அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை, மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை, மன்னிய பாடகத்தெம் மைந்தனை --- இது பெரிய திருமடல் பிரபந்தத்தில் கலியன் எனும் திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்!

திருமெய்யம் பற்றி சுஜாதா தேசிகன் அவர்களின் அருமையான இடுகை இங்கே!திருமெய்யராக கிடந்த கோலத்திலும் சத்யகிரி நாதராக நின்ற கோலத்திலும் பெருமாள் அருள் பாலிக்கும் திவ்ய தேசமான திருமெய்யத்தில், சுமார் 50 ஆண்டுகளாக (7 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்ரோக்ஷணத்தின் போது கோயிலின் எல்லா உத்சவ மூர்த்திகளுக்குமான திருமஞ்சனத்தை தவிர்த்து) பகவத் இராமானுசரின் திரு அவதார திரு நட்சத்திர தினம் கூட அனுசரிக்கப்படாமலேயே இருந்து வந்தது சற்றே வேதனையான விஷயம்!

உடையவரின் உத்சவத் திருவுருவம் எழுந்தருளப் பண்ணப்படாமல் கருவூலத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. எனது உறவினர் ஒருவர் முயற்சியின் பேரில், எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தியை, இவ்வருடம், அவரது அவதார திருநட்சத்திர நாளில் (27 ஏப்ரல் 2012) உள் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணவும் சிறிய அளவில் உத்சவம் நடத்தவும் உரிய அனுமதி பெறப்பட்டது.


அதன்படி, ஏப்ரல் 27 அன்று உபதேச (ஆட்காட்டி விரல் மடங்கி கட்டை விரலுடன் ஒரு வட்டம் ஏற்படுமாறு சேர்ந்து, மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கியபடி இருக்கும்) முத்திரையுடன் கூடிய ராமானுசரின் அழகிய உத்சவ மூர்த்தி, ஆழ்வார் மண்டபத்தில், உடையவரின் மூலவ மூர்த்திக்கு நேர் எதிரே எழுந்தருளினார். எம்பெருமானாருக்கு திருமஞ்சனம், முறையான நாலாயிர பிரபந்த சேவையும், சாற்றுமுறையும் நடைபெற்றன. பட்டு வஸ்திரமும், மாலைகளும் சாத்திக்கொண்டு எம்பெருமானார் தேஜஸ்வியாக அருள் பாலித்தது கண்கொள்ளா காட்சி!


இரு ஆச்சரியமான விஷயங்களை இதை வாசிப்பவரிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். பெருமாள் கிடந்த கோலத்தில் அருளும் திவ்யதேசங்களில், திருமெய்யரின் மூலவ மூர்த்தியே, நீள அளவில், மற்ற திவ்யதேச மூலவர்களைக் காட்டிலும் பெரியவர்! மற்றொன்று, திருமெய்யத்தில் உபதேச முத்திரையுடன் கூடிய எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தி, விசேஷமானது, காண்பது அரிது! வைணவ சம்பிரதாயத்தில், உபதேச முத்திரையில் மேல் நோக்கி இருக்கும் மூன்று விரல்களும், சித்தம், அசித்தம் மற்றும் ஈஸ்வர தத்வங்களாகிய தத்வத்ரயத்தையும், திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகங்களான ரகஸ்யத்ரயத்தையும் குறிப்பவை. ஆட்காட்டி மற்றும் கட்டை விரலும் சேர்வதால் ஏற்படும் வட்டம், பூர்ண சரணாகதியால் அடையவல்ல பரமபதத்தை குறிப்பதாகும். இப்படி உபதேச முத்திரையுடன் அருள் பாலிக்கும் எம்பெருமானார் திருவுருவம், திவ்யதேசங்களில், திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே காணப்படுகிறது.

பக்தர்களின் நித்ய தரிசனத்துக்காக, உடையவரின் உத்சவ விக்ரஹம், திருமெய்யரின் சன்னதியில் எழுந்தருளப் பண்ணப்பட்டு இருப்பதாலும், இதற்கு இந்து அறநிலையத்துறையின் அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாலும், திருமெய்யம் செல்லும் அன்பர்கள் இனி வருடம் முழுதும், பெருமாளோடு, எம்பெருமானாரையும் ஒரு சேர, அகம் மகிழ சேவிக்கலாம்! திருமெய்யத்தில் உடையவர் வழிபாடு மீண்டும் துவக்கப்பட்டதற்கு திருமெய்ய மக்களில் பலர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

சாதி பேதமின்றி, ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்தவர்கள் அனைவரும் வைணவர்கள் என்றதோடு நில்லாமல், திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, தனது ஆச்சாரியனான திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளைக்கு மாறாக, அஷ்டாட்சர மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தவர் அண்ணல் இராமனுசன்! வைணவ சம்பிரதாயத்தை நெறிப்படுத்தி, கோயில் ஒழுக்கை ஏற்படுத்தி, வைணவம் செழித்து தழைக்க இவ்வுலகில் அவதரித்த எம்பெருமானார், வைணவ குரு பரம்பரை என்ற ஆரத்தின் நடுநாயகமாய் திகழும் மாணிக்கம் போன்றவர் என்றால் அது மிகையில்லை. உடையவர் சம்பந்தம் இருந்தால் மட்டுமே, பூரண சரணாகதி நிலையிலும், பெருமாளை பற்ற முடியும் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு. அதனால், திவ்ய தேசங்களில், ராமானுச வழிபாடு என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.

அப்பேர்ப்பட்ட மகான் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் 2017-ஆம் வருடம் சித்திரையில் திருவாதிரை நட்சத்திர நாளன்று பூர்த்தியாவது ராமானுச அடியார்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். அதை, அவ்வாண்டும் முழுதும் ஒரு பொது நிகழ்வாக, விமரிசையாக, சொற்பொழிவு, வழிபாடு, திராவிட வேதம் என்று போற்றப்படும் நாலாயிர பாராயணம், தரும காரியங்கள் என்று பல இடங்களிலும் கொண்டாட வேண்டும். அதற்குள், வைணவர்கள் அனைவரும், பிரபன்ன காயத்ரி என்று போற்றப்படும் இராமனுச நூற்றந்தாதியை மனனம் பண்ணி, அதை பிறழாமல் பாராயணம் பண்ண கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அது போலவே, எல்லா வைணவ திவ்ய தேசங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும், ஏன், எல்லா விஷ்ணு கோயில்களிலும், உடையவரின் உத்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்படு, நித்ய கைங்கர்யத்துடனான ராமானுச வழிபாடு பரவலாக நடைபெற வேண்டும் என்பது பலரின் அவாவாக உள்ளது!

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே

(இராமானுச நூற்றந்தாதி 41)

இராமானுச முனியின் சீரும் சிறப்பையும் புரிந்து கொள்ள கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் அருளிய இப்பாசுரமே போதும்! அதாவது, "பரமபத நாயகனே நேரில் வந்து காட்சி அளித்தாலும், அஞ்ஞான இருளில் அதை உணர இயலாத நிலையில் இருந்த உலக மாந்தரெல்லாம், ராமானுஜர் அவதரித்த அக்கணமே, நல்ஞானம் பெற்று, நாராயணனுக்கு உற்றவர் ஆயினர்" என்பது இப்பாசுரத்தின் உரையாம்!

உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும், நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும், பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும், கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும், காணக்காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜனே!

தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!

எ.அ.பாலா

6 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

அருமையான பதிவு. உடையவரைக் கண்டு உத்ஸாகம் அடைந்தேன்.

இந்த முறை இன்னும் சில திவ்ய தேசங்களைத் தரிசிக்கலாம் என்ற எண்ணம்.

108 காணும் பாக்கியம் இல்லை என்றாலும் ஒரு நாற்பது அம்பது கிடைக்காதா என்ற நப்பாசை.

திருப்புல்லாணி, நாகை போகும் எண்ணம் இப்போதைக்கு.

உங்கள் பதிவில் உள்ள மலையடிவாரக் குடவரை கோவில் ஆசையைக் கிளருகிறது.

பெருமாள் என்ன நினைக்கிறாரோ.... பார்க்கணும்.

R Venkatachalam said...

தங்களது இடுகை அற்புதம். இராமாநுஜர் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

enRenRum-anbudan.BALA said...

டீச்சர்,

வாங்க! நலம் தானே ? ரொம்ப நாளாச்சு பேசி :) இன்னும் இந்தியாவில் இருக்கீங்களா ? என்னென்ன கோயில்கள் விஜயம் பண்ணீங்க ?

அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

//
தங்களது இடுகை அற்புதம். இராமாநுஜர் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
//
புரொபஸர்,

வாசித்து பின்னூட்டியதற்கு நன்றி. உங்கள் லெவலுக்கு நீங்கள் ராமானுஜர் பற்றிய புத்தகமே எழுத முடியும்!

அன்புடன்
பாலா

துளசி கோபால் said...

நலமே பாலா.இந்தியாவை போன ஜூலையில் விட்டாச்சு. ஆனால் இன்னும் சில மாதங்களில் ஒரு இந்தியப்பயணம் வாய்ச்சுருக்கு. அப்போ சில கோவில்களைத் தரிசிக்கணும் என்று திட்டம். அந்த 108 இல் பாதியாவது தேறுமானால் பாக்கியமே!

இதுவரை போன சில கோவில்களைப்பற்றி துளசிதளத்திலே மாய்ஞ்சுமாய்ஞ்சு எழுதியாச்சு:-)))))

maithriim said...

இந்த லிங்கைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நான் உங்கள் பதிவுகளை பொறுமையாகப் படிக்க ஆரம்பிக்கிறேன். நிறைய கற்றுக்கொள்ள எனக்கு ஆவல்.

amas32

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails